சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அடிப்படை விடயங்கள் மாத்திரமே நாளைய தினம் கலந்துரையாடப்படும்” என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் நாளை வருகை தரவுள்ள உயர்மட்ட குழுவுடன் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறாது. மாறாக, புதிததாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் எவ்வாறு கொண்டுசெல்லப்படும் என்பது தொடர்பான அடிப்படை விடயங்கள் மாத்திரமே கலந்துரையாடப்படும்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பண ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, ஜனாதிபதியின் அதிகாரத்தின் பிரகாரம் பொதுத் தேர்தலுக்காக 5 பில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஆவணத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய மீதமுள்ள 6 பில்லியனை சமர்ப்பித்து நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளது”இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
















