நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதால் அரச நிதியில் பாரிய செலவு ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் , இதுதொடர்பாக மீள் கவனம் செலுத்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் குறித்த விடயம் தொடர்பாக விசேட குழுவொன்றின் ஊடகாக ஆய்வு நடத்தி, இரண்டு மாத காலத்திற்கும் அறிக்கையை பெற்றுக் கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமனா விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், இதன் முடிவுகளை அறிவிக்கும் விசேட செய்தியளார் சந்திப்பு இன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது ”மக்களுடைய வாக்குகளால் நியமிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சம்பளம், கொடுப்பனவு, ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்கள், பணியாட்குழாம், அலுவலக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போன்ற பல்வேறு உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதற்காக மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அரசு குறிப்பிடத்தக்களவு செலவை வருடாந்தம் செலவு செய்கிறது.
தற்போதுள்ள அரச நிதியில் இந்த அதிகளவான செலவுகளைக் குறைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அதுதொடர்பான விடயங்களை ஆராய்ந்து திறைசேரிக்கு தேவையற்ற செலவுச் சுமைகளை ஏற்படுத்துகின்றதும் மற்றும் தர்க்க ரீதியற்ற உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே, இவற்றுக்கு பதிலாக மாற்று முறைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பொருத்தமான விதந்துரைகளுடன் கூடிய விபரமான அறிக்கையை இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சட்டம், பொதுநிருவாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் தொழில் அமைச்சராக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ரீ. சித்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தக் குழுவில் ஓய்வுநிலை அமைச்சின் செயலாளரான திசாநாயக்க, ஓய்வுநிலை மாவட்ட செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரான ஜயந்தா புளுமுல்ல ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வருகை தரும் உயர்மட்ட குழுவினருடன் நாளை அடிப்படை கலந்துரையாடல்கள் மாத்திரமே இடம்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.