ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
அந்தவகையில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.
இந்தச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் பெட்ரிக், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றமைக்காக வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கையின் ஜனாதிபதியாக திசாநாயக்க ஆட்சியமைத்ததற்கு பிரித்தானிய அரசாங்கமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், சார்ள்ஸ் மன்னர் மற்றும் பிரித்தானிய பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) ஆகியோரின் பிரத்தியேக வாழ்த்துச் செய்திகளையும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கையளித்தார்.
நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானிகர், கல்வித்துறை உறவுகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அதேபோல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவி கிட்டுமென உறுதியளித்தார்.
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸிற்கும் (Paul Stephens) இடையிலான சந்திப்பும் இன்று கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.
சமுத்திர பாதுகாப்பு, எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு, அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இதன்போது உறுதியளிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் என்றும், இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
அதேபோல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்ளும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் பொருளாதார வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்தையும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்த கியூபா எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.
டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பாக சுட்டிக்காட்டிய கியூபா தூதுவர், இலங்கைக்கு டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் அறிவித்தார்.