ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரன்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தல்களில் 50 வீதமான வாக்குகள் ஜனாதிபதிகளுக்கு கடந்த காலங்களில் கிடைத்துள்ளது.
ஆனால், புதிய ஜனாதிபதிக்கோ 42 வீதமானோரின் வாக்குகளே கிடைத்துள்ளன. அதாவது 78 இலட்சம்பேர் அவருக்கு எதிராகவே வாக்களித்துள்ளார்கள். புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்க நாம் ஆதரவளிக்க தயார்.
தனியொரு கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள்தான் நாட்டையே அழிவுக்கு இட்டுச் சென்றிருந்தன.
உதாரணமாக, 18, 20 ஆவது திருத்தச்சட்டங்களை இதற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் இணைந்து செய்த அரசியலமைப்புத் திருத்தங்களான 17, 19, 21 அரசமைப்புச் திருத்தச் சட்டங்கள், நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டியிருந்தன.
தேசிய மக்கள் இவற்றை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரன்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.