ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 51 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் அண்மையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், பயங்கரவாதத்தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்தல் போன்றன உள்ளடங்கலாக சில நேர்மறையான வாக்குறுதிகளை புதிய அரசாங்கம் வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர், தம்மிடம் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அவசியமான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அதனை அரசாங்கத்துக்கு வழங்கி உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளமுடியுமா எனவும் இதன்போது அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தியினால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்புவதாகவும், இருப்பினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்கத்தூதுவர், இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.