ஒன்பதாவது (2024) ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணமானது இரு குழு நிலைப் போட்டிகளுடன் இன்று (03) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகவுள்ளது.
ஷார்ஜாவில் இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி 03.30 மணிக்கு ஆரம்பமாகும் முதல் போட்டியில் குழு பி இல் இடம்பிடித்துள்ள ஸ்கொட்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும்.
அதன் பின்னர், அதே மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகும் மற்றொரு போட்டியில் குழு ஏ இல் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
தொடரில் மொத்தம் மொத்தம் 23 போட்டிகள் 18 நாட்களில் நடைபெறும்.
அனைத்து போட்டிகளும் டுபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரண்டு நகரங்களில் நடைபெறும்.
2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணம் முன்னதாக பங்களாதேஷில் நடைபெறத் திட்டமிடப்பட்டது, ஆனால் அங்கு நிலவும் உள்நாட்டுக் கலவரத்தை அடுத்து வீரர்களின் பாதுகாப்பிற்காக போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஐசிசி தேர்வு செய்துள்ளது.
எனினும், பங்களாதேஷ் போட்டியை நடத்தும் அணியாக கருதப்படும்.
போட்டி விபரம்
தொடரில் ஐசிசி தகுதி பெற்ற 10 அணிகளை தலா ஐந்து அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 3 முதல் ஒக்டோபர் 15 வரை தங்கள் குழுவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும்.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெறும்.
இந்த இரண்டு அரையிறுதிகளிலும் வெற்றி பெறும் அணிகள் பின்னர் ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தும்.
குழுக்கள்
குழு ஏ இல், போட்டியின் மிகவும் வெற்றிகரமான அணியும், நடப்பு சாம்பியனுமான அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கை இடம் பெற்றுள்ளன.
குழு பி இல் போட்டியை நடத்தும் பங்களாதேஷ் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடம்பெற்றுள்ளன.