அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள், சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் பாரிய வெங்காயம் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் மொத்த சந்தை விலை சுமார் 156, 160, 170 ரூபாயாக உள்ளதால் தமக்கு இலாபம் இல்லை எனவும் இதனால் பயிர்ச்செய்கைக்காக பெற்ற கடனைக் கூட செலுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் வெளிநாட்டில் இருந்து பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்வதால், உள்ளுர் பெரிய வெங்காயத்திற்கு விலை போதிய அளவு இல்லை எனவும், இதனால், தொழிலில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் 1 கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 275 முதல் 300 ரூபாய் வரை வழங்க உரிய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.