”லைக்காவின் ஞானம் வெற்றிக் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியில்”அலெக்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் திருகோணமலை மாவட்ட மையம் ஏற்பாடு செய்த லைக்காவின் ஞானம் வெற்றிக் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றதுடன் இறுதி போட்டி நேற்று திருகோணமலை விபுலானந்தா கல்லூரியிலே இடம்பெற்றது.
10 போட்டியாளர்களைக் கொண்ட ஒரு அணியாகவும், 5 பந்துப்பரிமாற்றங்களைக் கொண்ட சுற்றுப்போட்டியாகவும் நடைபெற்றிருந்தது.
இதன் இறுதிப் போட்டியில் அலெக்ஸ் இளைஞர் விளையாட்டுக் கழகமும் கோல்டன் ஸ்டார் இளைஞர் விளையாட்டு கழகமும் மோதிக்கொண்ட நிலையில், அலெக்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.
வெற்றி ஈட்டியவர்களுக்கான பதக்கங்களையும் கேடயங்களையும் நிகழ்வில் பங்கேற்றிருந்த அதிதிகள் வழங்கிவைத்தனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதில அரசாங்க அதிபர் சுதாகரன், கல்லூரி அதிபர் காளிதாசன், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான விளையாட்டுத்துறை முகாமையாளர் ஸ்ரீரீதர், அறக்கட்டளையின் வலய முகாமையாளர் அகிலன், அறக்கட்டளையின் திருகோணமலை மையத் தலைவர் ஜோய், ஆதவன் செய்திக் குழுமத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் நிக்கி தொம்சன் மற்றும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசபைக்குட்பட்ட இளைஞர் கழக சம்மேளன அலுவலகர் பயஜ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.