அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நான்கு கைதிகள் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அங்கு இருந்த மூன்று அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியின்றி சிறைச்சாலைக்கு வெளியே உள்ள வளாகத்தில் துப்புரவு நடவடிக்கைகளுக்காக பத்து கைதிகள் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெளி வளாகத்தை சுத்தம் செய்வதற்காக பத்து கைதிகளை வெளியில் அழைத்துச் செல்ல தலைமை சிறைச்சாலை அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது நான்கு கைதிகள் காவலில் இருந்து தப்பினர் என்று சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தப்பியோடிய கைதிகளில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் உள்ளனர், அவர்களில் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில், தப்பியோடிய கைதிகளில் மூவர் பிடிபட்டுள்ளதாகவும், ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தலைமை சிறை அதிகாரி, இரண்டாம் நிலை சிறை அதிகாரி மற்றும் காவலர் உள்ளிட்டோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.