”எதிர்காலத்தில் குரலற்றவர்களின் குரலாக நான் செயற்படுவேன்” என ஐக்கிய ஜனநாயகக் குரலின் தலைவர் ரன்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் புதியக் கட்சி, கொழும்பில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரன்ஜன் ராமநாயக்க தலைமையிலான இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் இந்தக் கட்சி ஊடாக செயற்பாட்டு அரசியலுக்கு வந்துள்ளேன். நான் நாடாளுமன்றத் தேர்தலில் 3 தடவைகள் களமிறங்கியுள்ளேன். எனினும், மூன்றாவது தடவையில் எனக்கு நாடாளுமன்றில் ஒரு வருடம் கூட உறுப்பினராக இருக்கமுடியவில்லை.
ஒரு சிலரால், நான் நாடாளுமன்றுக்கு செல்ல தகுதியில்லாதவன் என்று கூறி, எனது பிரஜாவுரிமையும் இரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள எனது மைத்துனனின் வீட்டுக்கு, எனது வாக்காளர் அட்டை வந்திருந்தது.
எனினும், நான் கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தமையால். வாக்களிக்க முடியாமல் போய்விட்டது.
இதனையடுத்து தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் தொலைப்பேசியில் உரையாடியபோது, எனக்கு வாக்களிக்க முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.
இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணிகளுடனும் கலந்துரையாடியபோது எனக்கு வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்தார்கள். நான் சிறைக்குச் சென்று வந்தவுடன், அமெரிக்கா, இத்தாலி, கொரியா, ரூமேனியா, அவுஸ்ரேலியா, டுபாய், சவுதி அரேபியா போன்ற பல நாடுகளுக்கு பயணித்தேன்.
இங்குள்ளவர்கள் எல்லாம் என்னை நடித்துக் கொண்டும், பாடிக்கொண்டும் மட்டும் இருக்குமாறும் அரசியலுக்கு வரவேண்டாம் என்றும் கூறினார்கள்.
இன்னும் சிலர் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். உண்மையில், எமது நாட்டில் நடிப்பதற்கும், பாடல்களை பாடுவதற்கும் பலர் உள்ளார்கள்.
ஆனால், கசப்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர யாரும் இல்லை.
இந்த வெற்றிடம் இன்னமும் நாடாளுமன்றத்தில் உள்ளமையை நான் உணர்ந்தேன்.
எனினும், தற்போதுள்ள கட்சிகளுடன் நான் எப்படி இணைந்து பணியாற்றுவது என்பதை சிந்தித்தேன்.
இவர்கள் அனைவரும் திருடர்கள் என்று கூறிய நானே மீண்டும் எப்படி இவர்களுடன் இணைந்து அமர்வது? இதன்போது தான், புதியக் கட்சி ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பிக்குமாறு எனது நலன் விரும்பிகள் தெரிவித்தார்கள்.
இதற்கிணங்கவே, தூய்மையான எனது அரசியல் பயணத்தை மேற்கொள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற இந்தக் கட்சியை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளோம். கட்சியின் சின்னமாக ஒலிவாங்கி காணப்படுகிறது.
நான் கடந்த காலத்தில் எந்தவொரு விடயத்தையும் மறைக்காமல் தெரிவித்துள்ளேன் என்பதை மக்கள் அறிவார்கள். அதேபோன்று, எதிர்க்காலத்திலும் குரல் அற்றவர்களின் குரலாக நான் நிச்சயமாக செயற்படுவேன்” இவ்வாறு ரன்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.