”மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தனது அவுஸ்ரேலிய பிரஜா உரிமையை இரத்து செய்ததாக” ஐக்கிய ஜனநாயகக் குரலின் தேசிய அமைப்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் களமிறங்கும் விதமாக ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் புதியக் கட்சி, கொழும்பில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரன்ஜன் ராமநாயக்க தலைமையிலான இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே திலகரத்ன டில்ஷான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் கடந்த 17- 20 வருடங்களாக எனது நாட்டுக்கு கௌவரத்தை பெற்றுக் கொடுக்க எனது கை, கால்களை உடைத்துக் கொண்டு விளையாடியிருந்தேன்.
எனக்கு மக்களும், ஊடகங்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். 2011 ஆம் ஆண்டில் நான் கிரிக்கெட் அணியின் தலைவரானபோது, இளைய தலைமுறையினருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மற்றும் டி – 20 போட்டியிலும் எனது தலைமையின் கீழ் இலங்கை அணி வெற்றி பெற்றது.
அன்று நான் ஏற்றுக் கொண்ட சவாலைப் போன்று, இன்றும் இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக புதியதொரு சவாலை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
இந்த புதியக் கட்சியில் இணைந்து பொதுத் தேர்தலில் களமிறங்க, தற்போது பலர் முன்வந்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சியை அங்குரார்ப்பணம் செய்யும் முன்பே பலர் எம்முடன் இணைந்துக் கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், ஊழல், குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்த ரன்ஜன் ராமநாயக்க தலைமையில் அரசியல் பயணத்தை ஆரம்பித்தமையை முன்னிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மக்களுக்கான சேவையை செய்ய வேண்டும் என்பதற்காக நான் எனது அவுஸ்ரேலிய பிரஜாவுரிமையையும் இரத்து செய்துள்ளேன். ஒரு பெரிய பயணத்திற்கான ஆரம்பமே இது. இந்தப் பயணத்தில் மக்களும் எம்மோடு இணைந்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு ஐக்கிய ஜனநாயகக் குரலின் தேசிய அமைப்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.