நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானத்துடன் செயற்படுமாறும், நிவாரணப் பணிகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அவசரகால நிலைமையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அந்தந்த மாகாணங்களின் அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு எதிர்காலத்தில் அந்த நிவாரணங்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிவாரணப் பணிகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, உரிய நிவாரணங்களை முறையாக மக்களுக்கு வழங்குவதற்கு நன்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.