நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், மலையகம் குறித்து எவ்வாறான வாக்குறுதிகளை வழங்குகின்றனரோ அதற்கமையவே அவர்களுக்கு ஆதரவு வழங்கப்போவதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தமது ஆதரவினை வழங்குவது என்பது தொடர்பாக அக்கட்சியின் உயர் பீட கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை கொமர்சல் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த ஜனாதிபதி தேர்தலில் எங்களது கட்சி கௌரவ ஜனாதிபதி அனுரகுமார அவர்களை ஆதரித்தது.
அதில் அக்கட்சி வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எமது கட்சியின் சார்பில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொண்ட போதிலும் எமக்கு வாய்ப்பு பெற்றுக்கொடுக்கவில்லை எனினும் அது தொடர்பில் நாம் கவலையடைய வில்லை.
இருப்பினும் எதிர்காலத்தில் மலையகத்தில் எவ்வாறான சேவைகள் இடம்பெற போகின்றன என்பது தொடர்பாக நாங்கள் விளிப்பாகவே இருக்கிறோம்.
எனவே தான் இன்று கூடிய உயர் மட்டக்குழு எங்களது ஆதரவு யாருக்கு தேவை என்று கருதுகிறார்களோ அவர்களுடன் கலந்துரையாடி வெற்றிப்பெற்றால் மலையகத்திற்கு எவ்வாறான சேவைகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவீர்கள் என்பது தொடர்பாக கலந்துரையாடிய பின் ஆதரவு வழங்குவதற்கு கட்சி உயர் பீடம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அதே வேளை தற்போது மலையகத்திலிருந்து நாடாளுமன்றம் தெரிவாகி அமைச்சர்களாக இருந்தவர்கள் மலையகத்திற்கு என்ன சேவையாற்றினார்கள் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பாரிய கேள்வி குறியே காணப்படுகின்றன.
இன்றுள்ள இளைஞர் யுவதிகள் புதிய முகங்களையும் புதிய போக்கினையும் அர்த்தமுள்ள அபிவிருத்தியினையுமே விரும்புகின்றனர்.
எனவே அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கும் மலையக மக்களின் எதிர்ப்பார்ப்பிக்கும் ஏற்ற வகையில் எந்த கட்சி அல்லது சுயேட்சை குழு செயப்படுகின்றதோ அந்த கட்சிக்கே ஆதர வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.