மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் காட்டு யானைகள் எரிபொருள் தாங்கி ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இன்று முதல் களஆய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கல்லோயா – ஹிங்குரான்கொடை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த 19 ஆம் திகதி அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றிருந்தது.
கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் மீது காட்டு யானைக் கூட்டம் மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்ததோடு, 8 வயதுடைய யானைக் குட்டியொன்று பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தினால் ரயிலின் நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்டதோடு, தண்டவாளத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்தினால், மட்டக்களப்பு – கொழும்பு பிரதான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.
தண்டவாளம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமையால், அதனை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த பகுதியில் வேகத்தை குறைத்தே ரயில்கள் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இங்கு உடைந்துள்ள தண்டவாளங்களை புனரமைக்க இன்னும் ஒரு வாரம் தேவைப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இந்த குழுவினர் முதன் முறையாகக் கூடவுள்ளதுடன், 2 வாரங்களில் சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.