தீவு நாடான கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுவரும் மின்வெட்டுகளை கண்டித்து, வீதிகளில் குப்பைகளைக் கொட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் கடந்த வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் மின் வெட்டு ஏற்பட்டது.
மின் விநியோகம் சீரான அடுத்த 24 மணி நேரத்தில், மீண்டும் மின் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்டு, முழு தீவும் இருளில் மூழ்கியதால் மக்கள் ஆங்காங்கே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.பொருளாதார சரிவு உட்பட பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுதும் செயற்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்து,நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
எரிபொருள், தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையால் கியூபா நாட்டு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மின் தடை அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.