அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மேல் நீதிமன்றம் பிணை வழங்கியதாக பாகிஸ்தான் ஒளிரப்பு செய்திச் சேவையான ஜியோ டிவி புதன்கிழமை (23) தெரிவித்துள்ளது.
2018 முதல் 2022 வரை இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்ட அரசு பரிசில்களை இவர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர்.
சவுதி இளவரசர் புஷ்ராவுக்கு பரிசளித்த நகைகளும் இதில் அடங்கும்.
இந்த நிலையில் அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் புஷ்ரா பீபிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் அவர், சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா அல்லது அவர் எதிர்கொள்ளும் மற்ற குற்றச்சாட்டுகளில் சிறையில் தொடர்ந்தும் அடைக்கப்படுவாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிற்பகுதியில் இஸ்லாமாபாத் பொறுப்புக்கூறல் நீதிமன்றம் இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து.
மேலும், 2018 இல் நடந்த திருமணத்தின் போது இஸ்லாமிய நெறிமுறைகளை மீறியதற்காக இருவருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டும் உள்ளது.