வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 105.6 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாக SLBFE சுட்டிக்காட்டியுள்ளது.
SLBFE இன் கூற்றுப்படி,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிராக 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 570 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் பெறப்பட்ட 3,351 முறைப்பாடுகளில் 1,177 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன.
SLBFE இன் சிறப்பு புலனாய்வு பிரிவு 19 சோதனைகளை நடத்தியது.
இதன்போது, 17 உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 104 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புகள் தொடர்பான வெளிநாட்டு வேலை மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு பணத்தை வழங்குவதற்கு முன்னர் விவரங்களை சரிபார்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தும் SLBFE, வெளிநாட்டு வேலை மோசடிகள் தொடர்பாக பணியகத்தின் ‘1989’ என்ற துரித இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டது.