மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பதிவுத் தபாலில் கிடைத்த கடிதம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்
நேற்று பிற்பகல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என நீதவான் பெயரில் பதிவுத் தபாலில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதுடன் அந்தக் கடிதம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்
இன்று மற்றும் 28ஆம் திகதிகளில் நீதவான் நீதிமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கடிதம் போலி முகவரியில் அனுப்பப்பட்டது என மேலும் தெரியவந்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பிரிவுக்குட்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன்படி இன்று காலை நீதிமன்றத்திற்கு வந்தவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவவிடம் வினவியபோது, சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.