கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வியாழன் (24) அன்று, தனது லிபரல் கட்சியை அடுத்த தேர்தலில் வழிநடத்துவார் என்று கூறினார்.
அதேநேரம், நான்காவது முறையாக போட்டியிட வேண்டாம் என்ற ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களின் கோரிக்கையினையும் அவர் நிராகரித்தார்.
ட்ரூடோ தனது லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்களை புதன்கிழமை (23) மூன்று மணி நேரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
லிபரல் கட்சியின் கிட்டத்தட்ட 153 உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இராஜினாமா செய்வதற்கான அழுத்தம் கொடுக்கப்பட்டது.
கூட்டத்தில், ட்ரூடோவிடம் எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்யக் கோரி சுமார் 24 கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் முன்னோக்கிச் செல்லும் சிறந்த வழியைப் பற்றி வலுவான உரையாடல்கள் நடந்து வருவதாகவும், தான் அடுத்த தேர்தலில் லிபரல் கட்சியை வழி நடத்துவேன் என்றும் உறுதிப்படுத்தினார்.
லிபரல் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு ட்ரூடோவுக்கு இருப்பதாக அவரது அமைச்சரவை அமைச்சர்கள் கூறியுள்ளனர்.