இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி குழுவான ஓபன் சோர்ஸ் சென்டரின் (Open Source Centre)செயற்கைக்கோள் பட பகுப்பாய்வின்படி, ரஷ்யா இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வட கொரியாவிற்கு ஒரு மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெயை வழங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரேனில் ரஷ்யாவின் போரைத் தூண்டுவதற்காக மொஸ்கோவிற்கு பியோங்யாங் அனுப்பிய ஆயுதங்கள் மற்றும் படையினருக்கான கட்டணமே எண்ணெய் என முன்னணி நிபுணர்களும் இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளருமான டேவிட் லாம்மி பிபிசியிடம் கூறியுள்ளனர்.
இந்த பரிமாற்றங்கள் ஐ.நா. தடைகளை மீறுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
பிபிசியுடன் பிரத்தியேகமாகப் பகிரப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், கடந்த எட்டு மாதங்களில் மொத்தம் 43 முறை ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள எண்ணெய் முனையத்திற்கு ஒரு டஜன் வெவ்வேறு வட கொரிய எண்ணெய் கப்பல்கள் வந்ததைக் காட்டுகிறது.
இது குறித்த பிபிசியின் கருத்துக்கான கோரிக்கைக்கு ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு பதிலளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
திறந்த சந்தையில் எண்ணெய் வாங்க அனுமதிக்கப்படாத ஒரே நாடு வட கொரியா. அது பெறக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தின் பீப்பாய்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 500,000 என ஐக்கிய நாடுகள் சபையால் வரையறுக்கப்பட்டுள்ளது, இது அதற்குத் தேவையான அளவை விட மிகக் குறைவு.