வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. சுக்கிர பகவானுக்குரிய அதிதேவதையாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார்.
அதனால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது அதீத சக்தி வாய்ந்ததாகவே திகழ்கிறது.
மேலும் கார்த்திகை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பது சப்தமி திதியுடன் வருகிறது என்பது கூடுதல் விசேஷமான ஒன்று.
பிரசித்தி பெற்ற பெருமாள் ஆலயமாக திகழக்கூடிய திருப்பதியில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையில் நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வழிபாடு செய்யும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.
நெல்லி மரத்தில் மகாலட்சுமி தாயார் பெருமாள் வீற்றிருக்கிறார்கள் என்று பொருள்படும். எந்த ஒரு வீட்டில் நெல்லி மரம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஐஸ்வர்யத்திற்கு எந்த வித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
திருப்பதியில் செய்யக்கூடிய இந்த பூஜையை வனபோஜம் என்று கூறுவார்கள்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை அன்று நெல்லிக்கனி தீபம் ஏற்றி கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய வறுமை நிலை நீங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தீபத்தை சிவன் ஆலயத்தில் ஏற்றலாம். அல்லது வீட்டில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஏற்றலாம். வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையிலோ இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
எப்பொழுதும் போல் வெள்ளிக்கிழமை பூஜை அனைத்தையும் நிறைவு செய்த பிறகு 21 நெல்லிக்கனிகளை எடுத்து மேலே இருக்கக்கூடிய பகுதியை மட்டும் எடுத்துவிட்டு பூத்திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை வைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி முடித்த பிறகு ஒவ்வொரு தீபமாக ஏற்ற வேண்டும்.
கனகதாரா ஸ்தோத்திரம் நிறைவடைந்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
இந்த முறையில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்க நெல்லிக்கனி தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை நிலை முற்றிலும் மாறி செல்வ செழிப்புடனும் ஐஸ்வர்யத்துடனும் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.