சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெற்று முடிந்த 2025 இந்தியன் பிரீமியர் லிக் மெகா ஏலத்தில் 13 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை (Vaibhav Suryavanshi) ராஜஸ்தான் ரோயல் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட நபர் என்ற பெருமையை இதன் மூலம் வைபவ் சூர்யவன்சி பெற்றார்.
ஐபிஎல் மெகா ஏலத்தின் இரண்டாவது நாளின் போது பீஹாரை சேர்ந்த சூர்யவன்சியை 1.10 கோடி இந்திய ரூபாவுக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.
இவரை ஏலத்தில் எடுப்பதற்காக ராஜஸ்தான் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இரு அணிகளிடமும் குறைவான தொகை இருந்த சூழலில் ராஜஸ்தான் அணி சூர்யவன்சியை தன்வசப்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு பிறந்த வைபவ் சூர்யவன்சி 4 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
இவரது திறமையை பார்த்த அவரது தந்தை சஞ்சீவ் தனது வீட்டிற்கு பின்னாலேயே சிறிய அளவிலான கிரிக்கெட் மைதானத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
வைபவ் சூர்யவன்சிக்கு 9 வயது ஆக இருக்கும் போது கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார்.
அங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்ற நிலையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டுப் பிரிவில் சேர்ந்து அபாரமான திறமையை வைபவ் வெளிப்படுத்தினார்.
அவரது வெற்றிக்கு பயிற்சியாளராக இருந்த மனிஷ் ஓஜா என்பவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
பீஹாரில் நடைபெற்ற வினோ மான்கட் கிண்ணத்துக்கான கிரிக்கெட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய வைபவ் 400 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
12 வயதில் பீஹார் மாநில அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார்.
அவுஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக சென்னையில் 4 நாட்கள் நடந்த போட்டியின் போது 58 பந்துகளில் சூர்யவன்சி சதம் அடித்திருக்கிறார்.
இதேபோன்று இந்தியா பி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலும் வைபவ் சூர்யவன்சி இடம் பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலும் இவர் இடம் பிடித்தார்.
சூர்யவன்ஷிக்கு தற்போது 13 வயதாகிறது எனினும் சிலர் இவரது வயது 15 என்றும், அவரது வயது பதிவில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.