நாட்டில் கடந்த சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு, சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில் ”எரிபொருள் நிரப்பும் இடமான மாபிம பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விநியோகம் தடைபட்டுள்ளது எனவும், அதேநேரம் ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு எரிவாயு கொண்டு வரும் கப்பல் தாமதமானதாலும் கடந்த காலங்களில் எரிவாயு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு இருப்பினும் தற்போது குறித்தக் கப்பலில் இருந்து எரிவாயு இறக்கப்பட்டு வருவதால் விநியோக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.