“ஈழ விடுதலை இலட்சியத்திற்கான போரில் இன்னுயிர் நீத்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம்”
என்று நோர்வையில் வசிக்கும் ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அதற்குப் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. மாவீரர்களின் நினைவுகளையும் ஏனைய இயக்கங்களின் தியாகிகளின் நினைவுகளையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது என்று ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். மாவீரர் நாள் எனப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தியாகிகளை நினைவு நாள். அதேசமயம் விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்கள் தங்களுக்கென்று தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றன. எனவே அவரவர் தங்கள் தங்கள் தியாகிகள் தினத்தைக் கொண்டாடுவதுதான் சரி. இதில் மாவீரர் நாளுக்குள் ஏனைய இயக்கங்களின் தியாகிகளை நினைவு கூர்வது சாத்தியமில்லை என்பது அவர்களுடைய வாதமாக இருக்கிறது.
தமிழீழ தேசிய துக்க நாள் என்றால் அதில் விடுதலைப் போராட்டத்திற்காக உயிர் நீத்த எல்லா இயக்கங்களின் தியாகிகளையும் நினைவு கூர வேண்டும். எனவே மாவீரர் நாளை தேசிய துக்க தினமாக அனுஷ்டிப்பவர்கள் ஏனைய இயக்கங்களின் தியாகிகளையும் நினைவு கூர்ந்தால்தான் அது முழுமையான தேசிய துக்க நாளாக இருக்க முடியும் என்று முன் கண்ட பதிவைப் போட்ட நோர்வே நண்பர் மீண்டும் வாதிட்டார்.
தேசியவாத அரசியல் என்பது திரளாக்கம்தான். தேசம் என்ற திரளுக்குள் எல்லா இயக்கங்களும் அடங்கும். எல்லா தியாகிகளும் அடங்குவர். எனினும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லா இயக்கங்களுக்குமான பொதுவான நினைவு நாள் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி ஒரு பொதுவான நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு ஒரு பொதுக் கட்டமைப்பையும் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை பொதுவான நினைவு நாள் என்பது, இயக்கங்கள் கடந்து தியாகிகளை நினைவு நினைவு கூர்வது.அது தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயகச் செழிப்பைக் காட்டும்.
தமிழ்த் தேசிய அரசியலில் பொருத்தமான,சாத்தியமான பண்புருமாற்றம் நிகழ்ந்தால்தான் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பு சாத்தியப்படும்.அப்படி ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்கப்பட்ட பொழுதும் மேற்படி வாதங்கள் எழுந்தன.
தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது பல்வேறு தியாகிகள் தினங்கள் உண்டு. நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுதும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புத்தான்.எனவே அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூர்வது இப்பொழுதும் சட்டரீதியாக ஆபத்தானது. இம்முறையும் என்பிபி அரசாங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பை நினைவுகூர முடியாது என்று அறிவித்தது. நேற்று முகநூல் பதிவுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இவ்வாறு விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களை நினைவு கூர்வது நாட்டில் முழுமையாக அனுமதிக்கப்படாத ஒரு பின்னணியில், அந்த நாட்களை நினைவுகூர வேண்டும் என்ற தாகமும் அதிகமாக இருக்கும்.
ஏனைய ஆயுதப் போராட்ட அமைப்புகளோடு ஒப்பிடுகையில் விடுதலைப்புலிகள் இயக்கம் நீண்ட காலம் அரங்கில் நின்றது என்ற அடிப்படையில், அந்த இயக்கத்தில்தான் அதிகம் தியாகிகள் உண்டு. எனவே அதிகளவு தியாகிகளை நினைவு கூரும் நாளாக மாவீரர் தினமும், அதிகளவு மக்களை நினைவு கூரும் நாளாக மே 18ம் காணப்படுகின்றன. அதிகளவு மக்கள், அதிகளவு தியாகிகள் என்பதனால் அங்கே அதிகளவு உறவினர்கள் கூடுவார்கள்.அதிகளவு ஆர்வலர்கள்,செயற்பாட்டாளர்கள் கூடுவார்கள். இதனால் ஒப்பீட்டளவில் ஏனைய தியாகிகளின் நாட்களை விடவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நாட்களைப் பொறுத்தவரை அங்கு அதிகளவு மக்கள் திரள் இருக்கும். அதிகளவு உணர்ச்சிப் பெருக்கும் இருக்கும். தாயகத்தில் மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் எல்லா இடங்களிலும் நிலைமை அப்படித்தான் இருக்கும்.அவை பெருமளவுக்கு அனைத்துலக அளவில் அனுஷ்டிக்கப்படும் நாட்களாகவும் இருக்கின்றன.
ஆனால் ஏனைய நினைவு நாட்களுக்குத் தடை இல்லை. இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,ஏனைய இயக்கங்களும் உட்பட ஆயுதப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளுக்குமான ஒரு பொது நாளைக் கண்டுபிடிப்பது கடந்த 15 ஆண்டுகளாக சவால்கள் மிகுந்த ஒன்றாகவே இருந்து வருகின்றது.
ஒரு இயக்கம் தியாகி என்று கொண்டாடும் ஒருவரை இன்னொரு இயக்கம் அல்லது கட்சி துரோகி என்று கூற முடியும். ஒரு இயக்கம் குற்றவாளி என்று கூறிச் சுட்டுக் கொன்ற ஒருவரை இன்னொரு இயக்கம் போராளி, தியாகி என்று கொண்டாட முடியும். ஒரு இயக்கத்துக்கு தியாகியாக இருப்பவர் இன்னொரு இயக்கத்துக்கு அல்லது அவரால் பாதிக்கப்பட்ட பொதுமகனுக்கு துரோகியாக அல்லது கெட்டவராக இருக்க முடியும். ஒரு இயக்கத்துக்கு நல்லவராக இருப்பவர் அந்த இயக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமகனுக்கு அல்லது வேறொரு இயக்கத்துக்கு அல்லது கட்சிக்கு கெட்டவராக இருப்பார்.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் இயக்கங்களுக்கிடையிலான மோதலில் கொல்லப்பட்ட போராளிகள் உண்டு. இயக்கங்களால் கொல்லப்பட்ட பொதுமக்கள் உண்டு. என்ன நடந்தது என்று தெரியாமலே தொலைந்து போனவர்கள் உண்டு. இயக்கங்களால் கொல்லப்பட்ட கட்சிப் பிரமுகர்கள் உண்டு. அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய பரா மிலிட்டரி குழுக்களால் கொல்லப்பட்ட இயக்கத்தவர்கள் உண்டு. பொதுமக்கள் உண்டு. எனவே இந்த விடயத்தில் யார் யாரைக் கொன்றது? எதற்காகக் கொன்றது? என்று விவாதிக்கப் புறப்பட்டால் தமிழ் மக்கள் இறந்த காலத்திலேயே தேங்கி நிற்க வேண்டியிருக்கும்.
ஆனால் அதற்காக இறந்த காலத்தை அதன் தவறுகளோடு சேர்த்துப் புதைக்கவும் முடியாது. கடந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், குறிப்பாக கடந்த இரண்டு தசாப்த கால அனுபவங்களின் அடிப்படையில்,புதிய பண்புருமாற்ற அரசியல் ஒன்றை நோக்கி உரையாட வேண்டும்.
எனவே, போராட்டத்தில் உயிர் நீத்த எல்லாத் தியாகிகளுக்குமான ஒரு பொது நாளைக் கண்டுபிடிப்பதும் அதற்கு வேண்டிய ஒரு பொதுக் கட்டமைப்பை கண்டுபிடிப்பதும் அவற்றின் நடைமுறை அர்த்தத்தில் பண்புருமாற்றம்தான். தமிழ்த்தேசிய ஐக்கியம்தான்.அதுதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயத்தை மேலும் செழிப்பாக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது மேற்சொன்ன முரண்பாடுகளைக் கடந்து சிந்திக்கப்பட்ட ஒரு பண்புருமாற்றத்தின் விளைவுதான். அது ஏறக்குறைய பத்து ஆண்டுகள் நீடித்தது.பின்னர் சிதைந்து விட்டது.
அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள், தியாகிகளை நினைவு கூரும் விடயத்தில் ஒற்றைப் புள்ளியில் இணைக்கப்பட முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள். அந்த ஒற்றைப் புள்ளி இன்றுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதற்குரிய பொதுக் கட்டமைப்பையும் இன்றுவரை உருவாக்க முடியவில்லை. கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட ஒரு பொதுக் கட்டமைப்பு கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு செயலற்றுப் போயிருக்கும் ஒரு பின்னணியில், நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை பற்றிச் சிந்திப்பது சிலருக்கு அபத்தமாகத் தெரியலாம்.
ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அது கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால் மக்கள் அமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் கையாள போவதில்லை என்று அறிவித்தது. அதேசமயம் சங்குச் சின்னத்தை கையாள வேண்டாம் என்றும் கேட்டிருந்தது.ஆனால் கட்சிகள் சங்குச் சின்னத்தை தம் வசப்படுத்தியதன் மூலம் பொதுக் கட்டமைப்பின் புரிந்துணர்வுத் தளம் நொறுங்கிப் போனது.
தமிழரசியலில் ஏற்பட்ட அகப்பிந்திய ஒரு பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து செயல்பட முடியாத ஒரு பின்னணிக்குள் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக்கூட்டமைபைக் குறித்து யாரோடு யார் உரையாடுவது?
தமிழ் மக்கள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பண்புரு மாற்றத்தைக் குறித்த மனந் திறந்த, முற்கற்பிதங்கள் இல்லாத மிகக்குறிப்பாக தேர்தல் அரசியல் நோக்கங்கள் இல்லாத, உரையாடலுக்குப் போக வேண்டும்.
ஆயுதப் போராட்டம் நடந்த எல்லா சமூகங்களிலும் இறந்த காலத்தை கிண்டப் புறப்பட்டால் ரத்தமும் நிணமும் எலும்புக்கூடுகளும்தான் வெளியே வரும். கசப்பும் வெறுப்பும் வன்மமும் பழிவாங்கும் வெறியும் தூண்டப்படும். எல்லாருடைய கைகளிலும் ஏதோ ஒரு விகிதமளவுக்கு ரத்தம் இருக்கும்.
தமிழ் மக்கள் தங்களுக்குரிய அரசியல் பொருளாதார விடுதலையை அடையும் பொழுது அந்த வெற்றியின் மீது இந்த வெறுப்பை, பழிவாங்கும் உணர்ச்சியை, தியாகி துரோகி வேறுபாடுகளைக் கடப்பது இலகுவாக இருக்கும். ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத ஒரு பின்னணியில், தமிழ்த் தேசிய அரசியலில் உள்நோக்கிய பண்புருமாற்றத்தைச் செய்வது சவால்கள் மிகுந்ததாகவே இன்று வரை உள்ளது.
அவ்வாறான பண்புரு மாற்றத்தை நோக்கிய உரையாடலின் போக்கில் இப்போதைக்கு இடைக்காலத்துக்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு.
ஒவ்வொரு இயக்கமும் கட்சியும் அதன் தியாகிகளின் நாட்களை அதனதன் வசதிக்கு ஏற்ப அனுஸ்டிக்கட்டும்.ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் தன் தியாகியின் நாளை விரும்பியபடி அனுஷ்டிக்கட்டும்.ஒரு பொதுவான தியாகிகள் தினத்தை கண்டுபிடிக்கும் வரைக்கும் எல்லாத் தரப்புக்களும் எல்லாக் கட்சிகளும் அவரவர் தியாகிகள் தினத்தை அவரவர் அனுஷ்டிக்கட்டும். இந்த விடயத்தில் நினைவு கூர்தலில் பல்வகைமையை ஏற்றுக் கொள்வதே இப்போதைக்குப் பொருத்தமானது.