டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேரூந்துக் கட்டணத்தினை மாற்றமின்றி பேணுவதற்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய டீசல் விலை அதிகரிப்புக்கேற்ப பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்
இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கருதுத் தெரிவிக்கையில் ”மாதாந்த எரிபொருள் விலைசூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது பாவனைக்கு பெறப்படும் ஒட்டோ டீசல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் விலைதிருத்தத்தின் போது டீசல் விலை குறைக்கப்பட்டது. அதனால் நாம் பேரூந்து கட்டணத்தினையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். இம்முறை டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் நாம் பேருந்து கட்டணத்தில் எந்தவித மாற்றத்தினையும் மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளோம்.
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது. வாகன உதிரிபாகங்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. பாரிய சிக்கல்களுக்கு மத்தியிலேயே நாம் பேரூந்து சேவையினை முன்னெடுத்துவருகின்றோம். தனியார் பேரூந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல்வேறு தடவைகள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.