புதுச்சேரி – தமிழ்நாடு கடற்கரையை சனிக்கிழமை கடந்த ஃபெங்கால் புயல், ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
எனினும், அதன் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால் புதுச்சேரியின் பல பகுதிகளும் தமிழகத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால், புதுச்சேரி-தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பாடசாலை, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இடைநிறுத்தப்பட்ட சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் மறுநாள் நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
ஆனால் பல விமானங்கள் ஆரம்பத்தில் இரத்து மற்றும் தாமதங்களைக் கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் விமான நிலையங்களின் செயல்பாடுகள் இயல்பு நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், புயல் தாக்கம் காரணமாக பல ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, கடந்த 12 மணி நேரமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலையாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல், மிக மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து வட தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.