கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) வெற்றிகரமான ஒப்பந்தத்திற்குப் பின்னர், புது டெல்லிக்கும் பீஜிங்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சில முன்னேற்றம் கண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையில் செவ்வாய்க்கிழமை (03) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எல்லையில் அமைதி இல்லாமல் இரு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவு சாதாரணமாக இருக்க முடியாது.
எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் பரஸ்பர ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுக்கு சீனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறெனினும், எங்களின் அண்மைய அனுபவங்களின் விளைவாக எல்லைப் பகுதிகளை நிர்வகிப்பதற்கான மேலதிக கவனம் தேவை என்று அவர் கூறினார்.
அதேநேரம், எல்லா சூழ்நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று முக்கிய கொள்கைகளையும் இந்திய வெளிவிகார அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
முதலாவதாக, இரு தரப்பினரும் LAC ஐ கண்டிப்பாக மதிக்கவும் கவனிக்கவும் வேண்டும்.
இரண்டாவதாக, இரு தரப்பினரும் ஒருதலைப்பட்சமாக தற்போதைய நிலையை மாற்ற முயற்சிக்கக் கூடாது, மூன்றாவதாக, கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கிழக்கு லடாக் எல்லையில் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் இருந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றமான நிலையில் இருந்தன.
இந்த மோதலின் விளைவாக 20 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.