ஹந்தனை மலைத்தொடரில் சுற்றுலா மேற்கொண்ட போது காணாமல் போன மாணவர்கள் குழு ஒன்று இன்று (05) காலை மீட்கப்பட்டு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரின் கூற்றுப்படி, மாணவர்கள் நேற்றைய தினம் மலைகளுக்குச் சென்றுள்ளனர், ஆனால் ஒரு மாணவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டது.
மாலை 06.00 மணியளவில் வெளிச்சமின்மை, திடீர் மூடுபனி காரணமாக மாணவர்கள் வழி தவறிச் சென்றுள்ளனர்.
பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை விடுமுறை காரணமாக கொழும்பு மற்றும் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட மாணவர் குழுவொன்று சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் குழு நேற்று பேராதனை சரசவிகம பகுதியின் ஊடாக ஹந்தானை மலைப்பாதையில் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.















