அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா இன்று 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 44.1 ஓவர்களில் 180 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அணி சார்பில் அதிகபடியாக நிதிஷ் ரெட்டி 42 ஓட்டங்களை அடித்தார்.
அவுஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 87.3 ஓவர்களில் 337 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ஓட்டங்களை எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
இதனையடுத்து 157 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ரிஷப் பண்ட் 28 ஓட்டங்களுடனும், நிதிஷ்குமார் ரெட்டி 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்நிலையில் 3 ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, மொத்தமாக 175 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ஓட்டங்களை எடுத்த நிலையில், அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை எடுத்து 10 விக்கெட்டுகள் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.