இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது இன்று பிற்பகல் 01.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாப்பிரிக்க அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவின் போது 221 ஓட்டங்கள் முன்னிலையுடன் இருந்தது.
கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் ரிக்கல்டன் மற்றும் வெர்ரின்னே ஆகியோர் சதம் விளாசினர், அது தவிர அணத் தலைவர் டெம்பா பவுமா அதிகபடியாக 78 ஓட்டங்களையும் பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், அஷித பெர்ணான்டோ 3 விக்கெட்டுகளையும் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தினர்.
பின்னர், முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 328 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் பத்தும் நிஸ்ஸங்க 89 ஓட்டங்களையும், கமநிது மெண்டீஸ் 48 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் தலா 44 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
இதனால், 30 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாப்பிரிக்க அணி, போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 36 ஓட்டங்களுடனும், டெம்பா பவுமா 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இதனால், தென்னாப்பிரிக்க அணி 221 ஓட்டங்களுடன் முன்னிலையில் உள்ளது.
இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.
இரண்டு போட்டிகள் கொண்டுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் போடியில் தென்னாப்பிரிக்க அணியானது 233 ஓட்டங்களால் வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.