நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழங்கிய ஒரு தண்டனைதான். அதே சமயம் அர்ஜுனாவைத் தெரிவு செய்தமை என்பது தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே வழங்கிய ஒரு தண்டனைதான்.அதன் விளைவுகளை அவர்கள் பின்னாளில் அனுபவிக்க வேண்டியிருக்கும் .
தேர்தலுக்கு முன்பாக கட்சிகள் தங்களுக்கு இடையே அடிபட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு மூத்த அரசு அதிகாரி என்னிடம் சொன்னார்,” போகிற போக்கைப் பார்த்தால் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் என்று தமிழ்ச் சனம் முடிவெடுக்கும் ஒரு நிலைமை வரலாம்” என்று. ஆம் அதுதான் நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது. அதுபோல கொழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஒரு மூத்த முகாமையாளர் சொன்னார் “இந்த முறை தும்புத்தடியை மாற்றிப் பார்ப்போம்” என்று. திருநெல்வேலி சந்தையில் ஒரு மூத்த வியாபாரி சொன்னார், “இவர்களுக்கு- அதாவது- தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்” என்று.
இம் மூன்று கூற்றுக்களும் தமிழ் மக்களின் மனநிலையை ஏதோ ஒரு விகிதமளவுக்கு பிரதிபலித்தன என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தண்டனை.
ஆனால் அந்த தண்டனையிலிருந்து கட்சிகள் கற்றுக் கொண்டனவா ?
தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணி அவ்வாறு கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.தேர்தல் முடிவுகளின் பின் சுமந்திரன் வழங்கும் நேர்காணல்கள், அவருடைய விசுவாசிகள் சமூகவலைத்தளங்களில் எழுதும் கருத்துக்கள், உட்கட்சி முரண்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தும் விதம், தோல்வியை, அதனால் ஏற்பட்ட வெறுப்பை வெளிப்படுத்தும் விதம், போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவர்கள் தேர்தல் முடிவுகளில் இருந்து எதையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவானவை.கடந்த ஆண்டின் முடிவிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் ஆதவனுக்கு நான் எழுதிய கட்டுரைகளில் அதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தேன். “இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் ஒரு தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மூத்த,பெரிய கட்சிக்குள் காணப்படும் சீரழிவை வெளியே கொண்டுவரும். அதேபோல இந்த ஆண்டின் முடிவில் நடக்கக்கூடிய ஒரு தேர்தலானது தமிழ்த் தேசிய அரசியலுக்குள் காணப்படும் சீரழிவை வெளியே கொண்டு வரும்” என்று.
உண்மையில் அங்கு இந்த ஆண்டின் முடிவில் என்று கருதப்பட்டது, ஜனாதிபதி தேர்தல்தான். ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியதன்மூலம் அந்தச் சீரழிவை ஓரளவுக்குத் தவிர்க்கக்கூடியதாக இருந்தது. எனினும் ஜனாதிபதித்தேர்தல் முடிந்த கையோடு வந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை வெளியே கொண்டு வந்துவிட்டது. அந்தத் தேர்தல்மூலம் தமிழ் மக்கள் தங்களுக்கு வழங்கிய தண்டனையை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் போதிய அளவுக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்களா?
இதில் தொடர் தோல்வி சுமந்திரனுக்குத்தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் அவரைத் தோற்கடித்தார்கள். அந்தத் தோல்வியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. விளைவாக ஏற்பட்ட குழப்பங்களின் முடிவில் கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது. இப்பொழுதும் நீதிமன்றத்தில் தான் நிற்கிறது. அதன் தலைவர் யார் என்பதில் தெளிவற்ற ஒரு நிலை.
சுமந்திரன் உட்கட்சிப் பிரச்சினையை கையாண்ட விதம் தமிழ் மக்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியதும் அவருடைய தோல்விக்கு ஒரு காரணம். அதாவது ஆண்டின் தொடக்கத்தில் அவருடைய கட்சி ஆட்களே அவரைத் தோற்கடித்தார்கள்.ஆண்டின் முடிவில் தமிழ்மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள்.இந்த தோல்விகளில் இருந்து அவர் கற்றுக் கொண்டிருக்கிறாரா ?
அவருடைய நேர்காணல்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. கட்சிக்கு ஆசனங்கள் அதிகரித்து இருப்பதனை ஒரு வெற்றியாக அவர் காட்டப் பார்க்கிறார். இல்லை,அது வெற்றி அல்ல. தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த அதே அளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்திருக்கின்றன. அதையும் ஒப்பிட வேண்டும். மொத்த தமிழ் தேசிய ஆசனங்கள் சுருங்கியுள்ளன. அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். சாணக்கியனுக்கு கிடைத்த வெற்றி அவருடைய தனிப்பட்ட உழைப்பினால் மட்டும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலின் விளைவாகவும்தான் அந்த வெற்றி கிடைத்தது. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பில் கிடைத்தது 36 ஆயிரம் வாக்குகள்தான். ஆனால் வடக்கில் கிடைத்தது அதுபோல நான்கு மடங்கு. ஒரு கிழக்கு வேட்பாளருக்கு வடக்கில் கிடைத்த வாக்குகள் தாயக ஒருமைப்பாட்டுக்கு கிடைத்த வாக்குகள்தான். தாயக ஒருமைப்பாட்டுக்கான ஒரு நொதிப்பை அந்த வாக்களிப்பு ஏற்படுத்தியது. அந்த நொதிப்பும் ஒரு விதத்தில் கிழக்கில் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றிகளுக்குக் காரணம். எனவே சாணக்கியன் தன்னுடைய வெற்றியின் எல்லாப் பரிமாணங்களையும் சரியாக மதிப்பிட வேண்டும்.
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் முடிவுகளிலிருந்து பாடங்களைக் கற்றிருப்பதாகத் தெரியவில்லை. புலம்பெயர்ந்து வாழும் அதன் உறுப்பினர்கள் சிலர் வழங்கும் நேர்காணல்களில் அதைக் காண முடிகிறது.
இம்முறை தேர்தலில் ஆயுதப் போராட்டப் பாரம்பரியத்தில் இருந்து வந்த பெரும்பாலான தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். செல்வம் அடைக்கலநாதனைத் தவிர. அவருக்கு கிடைத்த வெற்றி கூட அரும்பொட்டில் கிடைத்த ஒரு வெற்றி.மன்னாரில் அவருக்குச் சவாலான ஒரு வேட்பாளர் நிறுத்தப்படாததால் கிடைத்த வெற்றி. உள்ளூரில் சமூகம் சார்ந்து, மதம் சார்ந்து கிடைத்த வெற்றி. அவரைத் தவிர வேறு எந்த ஆயுதப் போராட்ட மரபில் வந்த தலைவரும், உறுப்பினரும் வெற்றி பெறவில்லை.
அதிலிருந்து கற்றுக் கொள்வதற்குப் பதிலாக “அங்கே ஒரு சதி நடந்திருக்கிறது. ஆயுதப் போராட்ட மரபில் வந்தவர்களைத் தோற்கடிக்கும் சதி ” என்று ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு உருவாக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல,பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து இயங்கியிருந்திருந்தால் அந்த தோல்வியைத் தவிர்த்திருக்கலாம் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதில் உண்மை உண்டு. ஆனால் பொதுக் கட்டமைப்பை நோக்கி உழைத்த தமிழ் மக்கள் பொதுச்சபையானது அரசியலில் அறம், நேர்மை என்பவற்றை அதிகம் வலியுறுத்திய ஒரு சிவில் சமூகக் கூட்டமைப்பு ஆகும். கட்சிகள் தந்திரங்களைச் செய்யலாம். அரசியல்வாதிகள் தந்திரம்தான் வாழ்க்கை என்று கூறலாம். ஆனால் சிவில் சமூகங்கள் அவ்வாறு கூற முடியாது. “அரசியலில் கண்ணியமானவர்களின் தொகையை அதிகப்படுத்துவது, நேர்மையானவர்களின் தொகையை அதிகப்படுத்துவது, வாக்காளர்களுக்கு பொறுப்புக் கூறும் ஆட்களை முன்னிறுத்துவது…” என்றெல்லாம் கூறிவிட்டு, சிவில் சமூகங்கள் அதற்கு மாறாக நடக்க முடியாது.
பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு எழுதப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறாக சங்குச் சின்னத்தை சில கட்சிகள் சுவிகரித்தன. தமிழ் மக்கள் பொதுச்சபையானது அந்த சின்னத்தை பயன்படுத்த வேண்டாம் என்று ஞாயிற்றுக்கிழமை கேட்டிருந்தது. திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களுக்குள் அது தொடர்பான முடிவை எடுத்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருக்கலாம். அந்த இடத்தில் பொதுக் கட்டமைப்பின் புரிந்துணர்வுத் தளத்தைப் பாதுகாப்பதா? அல்லது சங்குச் சின்னத்தின் மூலம் புதிதாகத் திரட்டப்பட்ட வாக்குகளை சுவிகரிப்பதா? என்ற இரண்டு தெரிவுகளுக்கு இடையில் முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்தது. அவர்கள் பொதுக் கட்டமைப்பை பாதுகாப்பது என்று முடிவெடுத்து இருந்திருந்தால், சங்குச் சின்னத்தை சுவிகரிக்கும் முயற்சியைக் கைவிட்டு இருந்திருப்பார்கள். எனவே பொதுக் கட்டமைப்பை பாதுகாக்க முடியாமல் போனதற்கு கட்சிகள்தான் பொறுப்பு.
இப்பொழுது தோல்விக்கு யார் யார் மீதோ பழியைப் போட்டு, சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பது என்பது அந்தத் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள தயாரில்லை என்பதனைத்தான் காட்டுகின்றது.
இவ்வாறு தமிழ்த்தேசிய அரங்கில் உள்ள பிரதான கட்சிகளும் கூட்டுக்களும் தேர்தல் முடிவுகளில் இருந்து பொருத்தமான உண்மைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காத ஒரு பின்னணிக்குள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் முடிந்த கையோடு, பகிரங்கமாக ஒரு அறிவிப்பை விடுத்திருக்கிறது. புதிய அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்குமாக இருந்தால் அதில் இனப் பிரச்சனைக்கான தீர்வாக முன்வைக்கப்படக்கூடிய தீர்வு பொதியை எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அந்த அழைப்பு.தமிழ் மக்கள் பேரவையின் யாப்பு முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னணி அழைத்திருக்கிறது. அந்த அழைப்பு இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தால், அதை வரவேற்கலாம்.
அந்த அழைப்பை ஏற்று சிறீதரன் இரண்டு கஜன்களையும் சந்தித்திருப்பதனை ஆர்வத்தோடு பரிசீலிக்க வேண்டும். முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடும் அது தொடர்பாகப் பேச விருப்பதாக ஒரு தகவல்.
முன்னணி மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஐக்கிய முயற்சிகளுக்கு முதலில் முட்டுக்கட்டை போடுவது அவர்கள்தான். எனினும் இம்முறை அவர்களாக முன்வந்து ஓர் அழைப்பை விடுத்திருப்பதை சாதகமாகப் பரிசீலிக்கலாம். கட்சி அரசியலில் நிரந்தரமான நண்பர்களோ பகைவர்களோ கிடையாது. நிரந்தரமான நலன்கள்தான் உண்டு.தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான,தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை நோக்கி உழைப்பதற்காக இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், நேர்மையாக உண்மையாக, யார் உழைத்தாலும் யார் அழைத்தாலும் அதனை வரவேற்க வேண்டும்.