பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து அரசு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை (07) வெளியிட்ட முதல் அறிவிப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.
சிரியாவின் ஆயுதமேந்திய எதிர்க்கட்சி, அதன் போராளிகள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாகவும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ் “இப்போது அசாத்திடமிருந்து விடுபட்டுள்ளது” என்று கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டனர்.
ஜனாதிபதி பஷர் அல்-அசாத் எங்கிருக்கிறார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
எனினும், பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு, அசாத் டமாஸ்கஸில் இருந்து டிசம்பர் 8 அன்று அதிகாலையில் விமான் மூலமாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறியது.
அந்த அறிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால் சிரிய பிரதமர் மொஹமட் காசி அல்-ஜலாலி ஒரு வீடியோவில், “மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு தலைமைக்கும் அரசாங்கம் ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்று கூறினார்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவின் தலைவரான அபு மொஹமட் அல்-கோலானி, 775,000 மக்கள் வசிக்கும் ஹோம்ஸை கிளர்ச்சிப் போராளிகள் “விடுவிப்பதற்கான இறுதி தருணங்களில்” இருப்பதாக டிசம்பர் 7 ஆம் திகதி பிற்பகுதியில் கூறியிருந்தார்.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் HTS ஒரு பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், அசாத் ஆட்சியின் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு ஒரு பெரிய புவிசார் அரசியல் பின்னடைவை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இது தெஹ்ரானுடன் சேர்ந்து பல ஆண்டுகால உள்நாட்டுப் போரின் மூலம் சிரிய அரசாங்கத்தை ஆதரித்துள்ளது.
சிரியாவில் ரஷ்யா பல இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது.
இதில் ஹெமிமிமில் ஒரு விமானத் தளம் மற்றும் டார்டஸில் உள்ள மூலோபாய கடற்படை வசதிகளும் அடங்கும்.
இவை ஆப்பிரிக்காவில் மொஸ்கோவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.