நுவரெலியாவில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்து, ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்கள் 34, 41 மற்றும் 55 வயதுடைய பதுளை, ரெந்தபொல மற்றும் மஹவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் டிப்போவில் காசாளராகவும், சாரதியாகவும் பணிபுரிந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் 85 வயதான பாதுகாப்புப் உத்தியோகத்தரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்ததாகவும், டிப்போவில் இருந்த 1,052,167 ரூபா பணத்தை திருடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைதான சந்தேகநபர்கள் நேற்று நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.