இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு, சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும், மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம் செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.