சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து டிசம்பர் 13 ஆம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அசோக ரன்வலவின் இராஜினாமாவால் வெற்றிடமாக இருந்த சபாநாயகர் பதவிக்கு தற்போது எதிர்க்கட்சியின் பெயரை முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அனைத்து தரப்பினருடான இணக்கப்பாட்டுடன் உரிய பிரேரணை நிறைவேற்றப்படும் என நம்புவதாகத் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவும் நேற்று பிற்பகல் கூடி புதிய சபாநாயகர் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.