எதிர் வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கனடிய மத்திய அரசாங்கம் வரி விடுமுறை நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மற்றும் மாகாண விற்பனை வரி என்பன எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மக்களிடமிருந்து அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறையானது கடந்த சனிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக உணவுப் பொருட்கள், பியர், வைன், உணவக உணவுப் பொருட்கள், சிறுவர் ஆடைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு இவ்வாறு வரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த வரி விடுமுறை சலுகையினால் சிறிய வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விற்பனை தொடர்பான கணனி மென்பொருட்களில் மாற்றம் செய்ய நேரிடுவதாகவும், வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதாகவும் இது ஓர் சிக்கல் மிகுந்த செயல்பாடு எனவும் சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 6000 பொருட்களுக்கு இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.