குறுதிய கால இராணுவ சட்டமூலம் தொடர்பான விடயத்தில் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள தென்கொரிய சட்ட அமுலாக்க அதிகாரிகள் நீதிமன்ற பிடியாணை உத்தரவு கோரியுள்ளனர்.
தென் கொரியாவின் கூட்டுப் புலனாய்வுத் தலைமையகம் திங்களன்று (30) யூனைக் கிளர்ச்சி மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய பிடியாணை உத்தரவைக் கோரியது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு முன்னதாக அனுப்பப்பட்ட மூன்று அழைப்பாணைகள் நிராரிக்கப்பட்டதன் பின்னணியில் பிடியாணை உத்தரவினை நாடியதாக உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் (CIO), காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய கூட்டு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், தென் கொரிய வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவரை கைது செய்வதற்கான பிடியாணை கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் முடிவினை மேற்கொள்ளும்.
கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி யூனின் குறுகிய கால இராணுவச் சட்டமானது தென் கொரியாவை திகைக்க வைத்ததுடன், கிழக்கு ஆசிய தேசத்தை பல தசாப்தங்களில் அதன் மிகப்பெரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியது.
இதனால், யூன் டிசம்பர் 14 ஆம் திகதி அவரது பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார், தேசிய சட்டமன்றம் அவரை பதவி நீக்கம் செய்வதற்காக பெரும்பான்மையாக வாக்களித்தது.
அரசியலில் நுழைவதற்கு முன்பு நாட்டின் உயர்மட்ட வழக்கறிஞராகப் பணியாற்றிய பழமைவாதத் தலைவர், கிளர்ச்சி, ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தின் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.