சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 26ஆம் திகதி வரை நடைபெற்றது.
மகர விளக்கு பூஜை (டிசம்பர்) 31ஆம் திகதி தொடங்கியது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி நாளை (14) நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
அது பல இடங்களை கடந்து பெருவழிப்பாதை வழியாக வந்து பம்பை கணபதி கோவிலுக்கு நாளை பிற்பகல் வந்து சேரும். மாலையில் அங்கிருந்து புறப்படும் திருவாபரண ஊர்வலம், 6 மணிக்கு மேல் சன்னிதானத்தை வந்தடைகிறது. பின்பு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.
அதன் தொடர்ச்சியாக மாலை 6.30 மணிக்கு மேல் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரஜோதியை காண கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். அவர்கள் மகரஜோதி தெரியக்கூடிய பெரியானை வட்டம், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளனர்.
அது மட்டுமின்றி இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பம்பை, சன்னிதானம் மட்டுமின்றி, மரக்கூட்டம், சரங்குத்தி, சன்னிதான வலிய நடைப்பந்தல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருவாபரணங்கள் ஊர்வலம் பம்பையில் இருந்து பிற்பகல் செல்லும் என்பதால் நாளை காலை 10 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
திருவாபரண ஊர்வலம் சரங்குத்தியை அடைந்த பிறகே பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும், நாளையும் மெய்நிகர் வரிசை மற்றும் நிலக்கல்லில் ஸ்மாட் புக்கிங் செய்த பக்தர்கள் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அது மட்டுமின்றி நாளை மாலை பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்ய வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் அட்டத்தோடு, அட்டத்தோடு மேற்கு காலனி, இலவுங்கல், நெல்லிமலை, அய்யன்மலை, பம்பையில் மலை உச்சி, மலைஉச்சியின் நடுப்பகுதி, பெரியானை வட்டம், சன்னிதானம் பாண்டிதாவளம், தரிசன காம்ப்ளக்ஸ், அன்னதான மண்டப முன்பகுதி, திருமுற்றத்தின் தெற்கு பகுதி, ஆழி பகுதி, கொப்பரைகலம், ஜோதி நகர், வனத்துறை அலவலகம் முன்பு, குடிநீர் அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து மகரஜோதியை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20ஆம் திகதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.