தேங்காய் விலை இறங்கவில்லை. பெரிய தேங்காய் ஒன்று 200 ரூபாய் வரை போகிறது. முட்டை விலை கிறிஸ்மஸுக்கு சற்று முன் 27 ஆக இறங்கியது. ஆனால் இப்பொழுது மீண்டும் 35க்கும் 40க்கும் இடையே போய்விட்டது. அரிசி விலையும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறுவடைக் காலத்தில் மழை பெய்கின்றது. வன்னியில் வீதியோரங்களில் காய விடப்பட்ட நெல்மணிகள் நனைகின்றன. நெற் பயிர்களை ஒரு புழு தாக்குவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். அந்தப் புழுவை அதிக அளவு மருந்துகளைப் பிரயோகித்துக் கட்டுப்படுத்த வேண்டியிருப்பதாகவும் கூறுகிறார்கள். இப்படியே போனால் அரசி விலை மேலும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
விவசாயப் பாரம்பரியத்தில் வந்த இலங்கைத் தீவு அரிசியை இறக்குமதி செய்து வருகின்றது. கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகிய இலங்கை உப்பை இறக்குமதி செய்கின்றது. அரசாங்கம் நிலையான வைப்புக்களுக்கான பிடித்து வைத்திருக்கும் வரியை (withholding tax) அதிகரிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றது. வங்கிகளுக்கு அது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எதுவும் கூறப்படவில்லை என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிடித்து வைத்திருக்கும் வரி என்பது நிலையான வைப்புக்களுக்கான வட்டிக்கு விதிக்கப்படும் வரியாகும். ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் இந்த வரி ஐந்து விகிதமாக உயர்த்தப்பட்டது. இப்பொழுது அனுர அதனை 10%ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நிலையான வைப்புக்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு விட்டது.
தமிழ் மக்கள் மத்தியில் நிலையான வைப்புக்களை வைத்திருப்பவர்கள் யார் என்று பார்த்தால், பெருமளவுக்கு பென்சனியர்கள் அல்லது வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் அனுப்பும் காசில் தங்கியிருப்பவர்கள்தான். இவர்களில் யாருக்குமே முதலீட்டாளராக வரவேண்டும் என்ற ஆசை கிடையாது. தம்மிடமுள்ள செல்வத்தை ஏதாவது தொழில் துறைகளில் முதலீடு செய்து அதை லாபமாக எடுக்கத் தேவையான துணிச்சல் அவர்களுக்கு இல்லை. இருக்கிற காசுக்கு கிடைக்கிற வட்டியோடு திருப்திப்படும் ஒரு பகுதியினர் இவர்கள். அதிகம் ஆசைப்படாதவர்கள். ஆனால் இப்பொழுது அவர்களுடைய வருமானத்திலும் மண் விழப் போகிறதா?
ஏற்கனவே அரசாங்கம் நிலையான வைப்புக்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து விட்டது.அதனால் பல முதியவர்கள் மனம் நொந்து போய் இருக்கிறார்கள். இப்பொழுது அந்த வட்டிக்கான வரியை உயர்த்துவது என்பது அவர்களை மேலும் பாதிப்படையச் செய்யும்.
அனுர ஆட்சிக்கு வந்தபின் இதுவரையிலுமான பொருளாதார நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் நடுத்தர வர்க்கமும் கீழ் நடுத்தர வர்க்கமும் அதற்கு கீழ்த்தட்டில் வாழ்பவர்களும் பாதிக்கப்படும் நிலைமைகள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன.
அதாவது நாடு தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக ஸ்திரமான நிலையில் இல்லை என்று பொருள். அனுர நினைத்தது போல மாற்றங்களைச் செய்ய முடியவில்லை. முன்னைய ரணில் அரசாங்கம் வகுத்த தடத்தில்தான் புதிய அரசாங்கமும் பயணம் செய்கின்றது. ரணில் தொடக்கி வைத்ததைத்தான் அனுர தொடர்ந்து செய்கிறார்.
தோழருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்று புளட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் அண்மையில் ஒரு பேட்டியில் சுட்டிக் காட்டியிருந்தார்.தோழராகஇருந்த அனுர இப்பொழுது ஜனாதிபதியாக வந்திருக்கிறார். தோழராக இருந்தபோது அவர் வழங்கிய வாக்குறுதிகளுக்கும் ஜனாதிபதியாக வந்தபின் அவர் தலைமை தாங்கும் அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. தேர்தல் காலத்தில் வழங்கிய இலட்சியப் பாங்கான வாக்குறுதிகள் பல நடைமுறைச் சாத்தியமற்றவைகளாக தோன்றுகின்றன.
இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் குழந்தை. பொருளாதார நெருக்கடியின் விளைவாக வந்த அரசாங்கம் இது. பொருளாதார நெருக்கடியைச் சரியாகக் கையாளவில்லை என்றால் சிங்கள மக்கள் இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஏற்கனவே பொருளாதார நெருக்கடி வந்த கிரீஸ், அர்ஜென்டினா போன்ற நாடுகளில் நிலைமை அப்படித்தான் இருந்தது. எனவே பொருளாதார நெருக்கடியை குறைந்தபட்சம் ஓரளவுக்காவது தணிக்க வேண்டும். அரசாங்கம் அதன் கவனம் முழுவதையும் அதில் தான் குவிக்கும்.
மேலும் தனக்கு கிடைத்த மக்களாணையை எப்படித் தொடர்ந்து பலப்படுத்துவது என்று தான் சிந்திக்கும்.இனப் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறேன் என்று புறப்பட்டு மூன்று இனங்களையும் பகைக்கும் ஒரு நிலைமைக்கு போக அனுர தயாராக இல்லை. இனப்பிரச்சனையில் கை வைத்தால் தனக்குக் கிடைத்த வெற்றிகள் தோல்விகளாக மாறிவிடலாம் என்ற பயம் அவருக்கு உண்டு. எனவே பொருளாதார நெருக்கடி முதலில்; இனப்பிரச்சனைக்கான தீர்வு கடைசியில் என்றுதான் அவர் முடிவெடுக்கக்கூடும்.
அந்த அடிப்படையில் இந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில்தான் அவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக எதையாவது செய்ய முயற்சிக்கலாம். மகா சங்கத்தினரும் அரசாங்கத்துக்கு அவ்வாறுதான் ஆலோசனைகளை வழங்கியிருப்பதாக ஒரு தகவல்.
எனவே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யாப்புருவாக்க முயற்சிகளை விடவும் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் குறித்தே அரசாங்கம் முதலில் சிந்திக்கும். அதோடு தனக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடுத்தடுத்த தேர்தல்களில் எப்படி பலப்படுத்துவது என்று தான் சிந்திக்கும். இந்த அடிப்படையில் பெரும்பாலும் தேர்தல்கள் நான் முதலில் வரும். யாப்புருவாக்க முயற்சி இப்போதைக்கு வரும் வாய்ப்புகள் குறைவு. வந்தாலும் அதனை மெதுமெதுவாகத்தான் நகர்த்துவார்கள்.
எனவே இப்போதைக்கு வராத அல்லது வராமலே போகக்கூடிய யாப்புருவாக்க முயற்சிகளை நோக்கித் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதா? அல்லது உடனடிக்கு வரக்கூடிய தேர்தல்களை நோக்கி தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதா? எது உடனடியாகச் செய்யப்பட வேண்டியது?
இந்தக் கேள்வியின் பின்னணியில் வைத்துத்தான் அண்மை வாரங்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளையும் பார்க்க வேண்டும். இந்த முயற்சிகளின் அடுத்த கட்டமாக வரும் 25ஆம் தேதி கட்சிப் பிரமுகர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நடக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது. படிப்படியாக கட்சிகளை ஒருங்கிணைப்பது என்ற திட்டம் இதில் இருக்கலாம். ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால் யாப்புருவாக்க முயற்சிகளை நோக்கி ஒருங்கிணைவதா? அல்லது உடனடியாக வரக்கூடிய தேர்தல்களை நோக்கித் தந்திரோபாயமாகச் சிந்திப்பதா? இது அவசியமானது ? எது உடனடியாகச் செய்யப்பட வேண்டியது?
யாப்பு வரலாம் வராமல் விடலாம். ஆனால் தேர்தல் வரும். அந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தன்னை மேலும் தமிழ்ப் பகுதிகளில் பலப்படுத்துமாக இருந்தால், அர்ஜுனாக்கள் மேலும் புதிதாக எழுவார்களாக இருந்தால், உள்ளூராட்சி மன்றங்கள் பல அறுதிப் பெரும்பான்மை இல்லாத தொங்கு மன்றங்களாகவே அமையக்கூடும். அவ்வாறு நடக்கக்கூடிய தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியானது தமிழ் மக்கள் மத்தியில் மேலும் வெற்றிகளைப் பெற்றால் என்ன நடக்கும்?
தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் இப்பொழுது தமிழ்த் தரப்பு அல்ல. நாங்களும் தமிழ்த் தரப்புத்தான் என்று அவர்கள் முன்னரை விடப் பலமாகச் சொல்வார்கள். ஏற்கனவே திருக்கோணமலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவரும் பிரதி வெளிவகார அமைச்சருமாகிய அருண் அவ்வாறு சொல்லி விட்டார். எனவே அடுத்தடுத்த தேர்தல்களிலும் தமிழ்த் தரப்பு எனப்படுவது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டுமல்ல என்ற நிலைமை மேலும் பலமடையுமாக இருந்தால், அதன் பின் வரக்கூடிய ஒரு யாப்புருவாக்க முயற்சியில் அரசாங்கத்தின் பிடி முன்னை விடப் பலமாக இருக்கும்.அவர்கள் விரும்பிய தீர்வை நோக்கி நிலைமைகளை நகர்த்தவும் முடியும்.
எனவே உடனடிக்கு வரக்கூடிய தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களை ஒரு பலமான தரப்பாக நிரூபிக்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாதது; கட்டாயமானது.
இந்தத் தேவையை முன்வைத்து தமிழ்க் கட்சிகள் குறைந்தபட்சம் தந்திரோபாய பகைத் தவிர்ப்பு உடன்பாடு ஒன்றுக்குப் போக வேண்டியது அவசியமா ? அல்லது இப்போதைக்கு வராத ஒரு யாப்புருவாக்க முயற்சியை நோக்கி மெது மெதுவாக ஒன்று திரள்வது அவசியமா?