காசா பகுதியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்த நிலையில், திங்கட்கிழமை (20) அதிகாலை 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
காசாவில் ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலுக்குத் திரும்பிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
அந் நாட்டு நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் (23:00 GMT), 90 பாலஸ்தீனிய கைதிகளை ஏற்றிக்கொண்டு செஞ்சிலுவைச் சங்கப் பஸ்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவை வந்தடைந்தன.
இஸ்ரேலியப் படைகள் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று எச்சரித்த போதிலும் கைதிகள் மேற்குக் கரைக்கு திரும்பியபோது, ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமைச் சேர்ந்த 69 பெண்கள் மற்றும் 21 பதின்ம இளைஞர்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அடங்குவர்.
2024 மார்ச் மாதத்தில் இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீனிய பத்திரிகையாளர் புஷ்ரா அல்-தவில் திங்களன்று விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.