பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரும், முன்னாள் அவாமி லீக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (19) பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
மேலதிக தலைமை பெருநகர நீதிவான் ஜியாதுர் ரஹ்மான் பிடியாணை உத்தரவினை பிறப்பித்ததுடன், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்குள் அதனை நிறைவேற்றுவது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாரைக் கேட்டுக் கொண்டார்.
IFIC வங்கி சம்பந்தப்பட்ட இரண்டு வங்கி காசோலைகள் பவுன்ஸ் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(Cheque Bounce என்பது, காசோலையில் குறிப்பிட்டுள்ள பணத்தை பெற தேவையான அளவு பணம், குறிப்பிட்ட வங்கி கணக்கில் இல்லை என்பதை குறிக்கும்)
கடந்த ஆண்டு உள்நாட்டு அமைதியின்மை காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர், ஷகிப் பங்களாதேஷுக்குத் திரும்பவில்லை.
ஷகிப் கடந்த ஆண்டு இறுதியில் கான்பூரில் இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார்.
டுபாயில் அடுத்த மாதம் ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் டிராபி பங்களாதேஷ் அணிக்கான அவரது இறுதி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.