கனவு என்பது நம்முடைய தூக்க நிலையில் உண்டாவது. லேசான உறக்கம் முதல் ஆழ்ந்த உறக்கம் வரை தூக்கத்தின் எந்த நிலையிலும் கனவு வரும்.
கனவுகள் என்பவை நம்முடைய தூக்கத்தின் போது, நம் மூளை உருவாக்குகிற படங்கள், உணர்வு நிலைகள் மற்றும் உணர்ச்சிகள் அனைத்தும் இணைந்ததையே நாம் கனவு என்று குறிப்பிடுகிறோம். தொடர்ச்சியான கதைகளாகவோ, அர்த்தமுள்ள காட்சிகளாகவோ தெளிவான தோற்றத்தை நமக்குத் தரும்படியான காட்சிகளாகவே உருவாகின்றன.
ஏழு வகையான கனவுக் கோட்பாடுகள்
மனிதர்களின் தூக்கம் மற்றும் கனவுகளைப் பற்றி ஆய்வு செய்த உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான, மேத்யூ வாக்கர் கனவுகள் குறித்தும் அதன் வகைபாடுகள், உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஏழு வகை கோட்பாடுகளாக வகைப்படுத்துகிறார். அவை,
உணர்ச்சி செயலாக்கம் பெறுதல் – நம்முடைய உணர்ச்சி நிலைகள் ஒருவகையில் செயலாக்கம் பெற்று, அதன் வெளிப்பாடாக கனவு தோன்றும். பொதுவாக கனவுகள் அதிகமாக உணர்ச்சி வசப்படும் என்பது நிறைய பேருக்கு தெரியாது.
மனிதன் இயல்பு நிலையில் அதிகமாக உணர்ச்சி வசப்படுவான் என்று நினைக்கிறோம். ஆனால் கனவுகள் அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடியவை. இவை நாம் இயல்பு நிலையில் இருக்கும்போது தோன்றும் பல உணர்ச்சிப்பூாவமான சவால்களைச் சமாளிக்க உதவி செய்யும். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சிரமங்களைச் சமாளிக்கவும் அதற்கு நம்மை தயார்ப்படுத்தவும் இந்த கனவுகள் நமக்கு உதவுகின்றன.
கற்றுக்கொள்ளும் ஆற்றல் – கனவுகள் பற்றி ஆய்வு செய்த பல ஆய்வாளர்களும் குறிப்பிட்டு சொல்வது இந்த கற்றல் பண்பு தான். கனவுகளின் நோக்கமே நாம் புதிய திறன்களை கற்றுக் கொள்வதும் நமக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கின்ற திறன்களைக் கூர்மைப்படுத்தவும் கனவுகள் உதவி செய்கின்றன. ஒருவர் ஒரு பணியைச் செய்யும்போதும், அல்லது ஏதேனும் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய நிலை வரும்போதும் அதுகுறித்த கனவுகள் அவருக்க வரலாம். அது அந்த சிக்கலுக்கான புதிய திறப்புகளையும் அவருக்குக் கொடுக்கலாம்.
நினைவுகளை ஒருங்கிணைத்தல் – கனவுக் கோட்பாடுகளில் இது மிக முக்கியமான கோட்பாடாகும். நினைவுகளை ஒருங்கிணைத்து காட்சியாக உருவாக்குவது, புதிய நினைவுகளை உருவாக்குவது ஆகியவற்றை இந்த கனவு செய்கிறது. அதாவது நம்முடைய மூளை குறுகிய கால நினைவுகளை ஒருங்கிணைத்து நீண்ட கால நினைவுகளாக சேமிக்கிறது. அதுதான் கனவாக மாறுகிறது.
மன ஒழுங்கமைதி – நம்முடைய மனதின் நிலைகளை ஒழு ஒழுங்குநிலைக்குள் கொண்டு வருவதற்கே கனவுகள் தோன்றுகின்றன என்றும் சில அறிஞர்கள் கனவுக்கு விளக்கம் தருகிறார்கள். அதாவது ஒருவரின் மனம் அவர் விழித்திருக்கும்போது சந்தித்த உணர்ச்சி தரவுகளை ஆராய்ச்சி செய்து, தேவையான இடங்களில் சில நரம்பியல் இணைப்புகளை மூளைக்குள் இருந்து கடத்தி மனதை ஒழுங்கமைக்கிறது.
பிற உலகத் தொடர்புகள் – கனவுகளுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்களோடு ஆன்மீன ரீதியான விளக்கங்களும் தரப்படுகினற்ன. அதில் மிக முக்கியமானது இந்த பிற உலகத் தொடர்பு. அதாவது கனவுக்குள் பிற உலகத்தில் (வேறு இடம், சூழல்) இருப்பதாகவோ பிற பரிமாணங்களை உருவாக்குவதோகவோ தோன்றலாம். உதாரணத்துக்கு கனவுகளின் வழியே வாழ்க்கையில் பிரிந்தவர்களையோ அன்புக்கு உரியவர்களையோ சந்திப்பது போன்றவை நிகழும்.
சீரற்ற சத்தங்கள் – இன்னும் சில ஆய்வாளர்கள் கனவு என்பதற்கு தனியே எந்தவித காரண, காரியமோ அர்த்தங்களோ கிடையாது. அது மூளையின் சீரற்ற செயல்பாட்டால் உருவாக்கப்படும் ஒன்று. அதை வெறும் சத்தமாகவே கருதுகிறார்கள்.
தீராத, சுயநினைவற்ற ஆசைகள் – இவைதான் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படுகிறது. நம்முடைய மனதின் அடியாழத்தில் தேங்கியிருக்கும் விருப்பங்கள், நம்முடைய நிறைவேறாத ஆசைகள் ஆகியவை சேர்ந்து கனவுகளாக உருவாகின்றன.
கனவுகளின் வகைகள்
கனவுகள் பெர்துவான அவற்றின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு ஆறாக வகைப்படுத்தப்படுகின்றன.
பறக்கும் கனவுகள் – இந்த வகை கனவுகள் மிகவும் ஆனந்தமானவை. நம்மால் நிஜத்தில் நினைத்துப் பார்க்க முடியாதவை, கற்பனைக்கு எட்ட முடியாதவை ஆகியவற்றை இந்த வகை கனவுக்குள் அடக்குவார்கள். பொதுவுாக கனவுல மிதக்குறான் என்று சொல்வதைக் கேட்டிருப்போம். அதாலது ஒருவித சுதந்திரதையும் கட்டுப்பாடற்ற மகிழ்ச்சியையும் இந்த வகை கனவுகள் கொடுக்கும்.
தெளிவான கனவுகள் – தூங்குபவர் தன்னுடைய தூக்க நிலையில் கூட தான் கனவு காண்பதை உணர முடிந்தால், அதை உணர்ந்து கனவுக்குள்ளேயே தன்னுடைய உடல், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறார் என்றால் அந்த வகை கனவு தெளிவாக கனவுகள் என்று வரையறுக்கப்படுகிறது.
கெட்ட கனவுகள் – கெட்ட கனவுகள் என்பவை ஏதேனும் ஒருவகையில் நமக்கு பயத்தைத் தூண்டும் கனவுகளாக இருக்கின்றன. தினசரி சந்திக்கும் அழுத்தங்களை மூளை சேகரித்து அவற்றின் வழியே வெளிப்படுத்தும் நினைவுகள் கனவுகளாக தோன்றும். இந்த கெட்ட கனவுகள் தோன்றுவதற்கு ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல்நிலை, அச்சவுணர்வு, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் எற்படுகின்றன.
தீர்க்கதரிசன கனவுகள் – சிலர் தங்களுக்கு வரும் கனவுகள் பலிக்கின்றன என்று கூறக் கேள்விப்பட்டு இருப்போம். அதாவது எதிர்காலத்தில் நடக்கப் போகும் சில நிகழ்வுகளோ அல்லது அவை பற்றிய குறிப்புகளோ கனவுகளாக வரக்கூடும். அதுபோன்ற கனவுகளை தான் தீர்க்க தரிசன கனவுகள் என்று அழைக்கப்படுகின்றன.
தொ்டர்ச்சியான கனவுகள் – ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது வெவ்வேறு சிறு சிறு கனவுகளின் தொடர்ச்சியாகவோ அல்லது இடையில் எழுந்து மீண்டும் கனவு வரும்போது அது முந்தைய கனவின் தொடர்ச்சியாகவோ அல்லது அதோடு தொடர்புடைய விஷயங்களாகவோ கனவுகள் வரலாம்.
மன அழுத்தக் கனவுகள் – மன அழுத்தக் கனவுகளும் பெரும்பாலும் நிறைய பேர் சந்தித்திருப்பீர்கள். இது கிட்டதட்ட கெட்ட கனவுகளுக்கு நெருக்கமானதாக தோன்றலாம். ஆனால் அதிலிருந்து வேறுபட்டது தான். கனவு நிலையிலும் சரி, விழித்த பிறகும் கூட ஒருவித பதட்ட மனநிலையையும் விரும்பத்தகாத உணர்வையும் இநத மன அழுத்தக் கனவுகள் உண்டாக்குகின்றன.