கீழடியை அடுத்து, தமிழ் நாட்டின் தொன்மையையும் தமிழர்களின் வரலாற்றினையும் கண்டறியும் விதமாக விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் தற்போது 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வகழாய்வின் போது சுடுமண் முத்திரை, கண்ணாடி மணிகள், மண் குடுவை, மண்பாண்ட பாத்திரங்கள் உள்பட 3,200-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ பொம்மையின் கால் பகுதி சிதைந்த நிலையில் கிடைத்துள்ளதாகவும், சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் சிறிய அளவிலான மண்குடுவை மற்றும் வெள்ளை நிற சங்கு வளையல் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறுகையில், தொல் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகழாய்வு முழுமையாக முடிவடைந்த 8 குழிகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 8 குழிகளை பிற மாவட்டங்களில் இருந்து கல்லூரி, பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள், பார்வையிட வருவதால் மூடப்படாமல் உள்ளது. விரைவில் கூடுதலாக அகழாய்வு குழிகள் தோண்டப்பட உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்துள்ளமை தொல்பொருள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் வெம்பக்கோட்டையில் இடம்பெற்ற முதலாம் மற்றும் 2-ம் கட்ட அகழாய்வுகளில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.