அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விபரங்களைத் திரட்ட அந்நாட்டு அரசு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இந்திய மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றார்.
இதன் முதற்கட்டமாக கொலம்பியாவைச் சேர்ந்த பலரை இராணுவ விமானங்கள் மூலம் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் பக்கம் ட்ரம்பின் பார்வை திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் அமெரிக்காவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்கள் படித்து முடித்த பின்னரும் அங்கு தங்கி இருப்பதாகவும், குறிப்பாக விசாவின் கால எல்லை முடிந்த பின்னரும் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும், சிலர் கல்வி கற்பதற்காக வந்துவிட்டு பணிபுரிந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க வட்டார தகவலின்படி அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர். இவர்கள்தான் அதிக அளவில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.