அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு இன்று முதல் அழுலுக்கு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரி விதித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இந்த இறக்குமதி வரி இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்றும் கனடா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.