எதிர் வரும் 12 ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து அவருடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது ‘அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகைக்கு வருவார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் எதிர்வரும் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து வரும் 12ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து 13ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் அன்றிரவு ட்ரம்ப் சார்பில் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 14ஆம் திகதி அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி அழைக்கப்படாத நிலையில், நடைபெறவுள்ள குறித்த சந்திப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.