பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை வழங்குவதற்காக வரும் தரப்பினரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரின் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனவும் முறைப்பாடுகள் நிராகரிக்கப்படுவதாகவும் எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் ஏனைய அதிகாரிகளும் பல்வேறு உண்மைகளை முன்வைத்து இவ்வாறு நிராகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தனது சுற்றறிக்கையில் குறிப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்படும் முறைப்பாடுகளை பதிவு செய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பு.
இதன்படி, இனிமேல் பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெறும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.