தலைநகர் டெல்லியை ஆட்சி செய்யப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23ஆம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர்.
இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. அதுமட்டுமல்லாது நட்சத்திர வேட்பாளர்களான அர்விந்த் கெஜ்ரிவால், அதிஷி,மணிஷ் சிசோடியா, அல்கா லம்பா, ரமேஷ் பிதூரி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் கவனம் பெற்றுள்ளன.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து தமது வாக்குகளைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலுக்காக பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் மத்திய துணை இராணுவப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, 30 ஆயிரம் டெல்லி பொலிஸார் 22 ஆயிரம் துணை இராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.