நாட்டில் அரிசித் தட்டுத்தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், அரசாங்கமானது, நெல்லுக்கான நிர்ணய விலையை இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டரிக்கான நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் கிலோ 132 ரூபாய்க்கும், நெல் கொள்வனவு சபையினால் நாளை தொடக்கம் கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை நெல்லுக்கான நிர்ணய விலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ, “எதிர்க்கட்சியாக இருக்கும்போது நெல்லுக்கான குறைந்த விலையே 130 ரூபாயாக இருக்க வேண்டும் என தெரிவித்த தற்போதைய ஆளும் தரப்பினர், ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளை மறந்துவிட்டார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில் ” நெல் விலை தொடர்பாக விவசாயிகளிடம் கடும் அதிருப்தியான மனநிலை கடந்த காலங்களில் காணப்பட்டது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் விவசாயிகளுக்கு ஆதரவாக பல தடவைகள் குரல் கொடுத்திருந்தது.
இப்படியான அரசாங்கம் விவசாயிகளை இன்று மறந்துவிட்டது. பரவாயில்லை, காலம் தாழ்த்தியேனும் நெல்லுக்கான நிர்ணய விலையை பெற்றுக் கொடுத்தமையை நினைத்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இந்த விலையைத்தானா தேர்தல் காலங்களின்போது வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்கள் என்றும் கேட்க விரும்புகிறோம்.
இந்த விலை தொடர்பாக விவசாயிகளிடம்தான் கேட்க வேண்டும். இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது குறைந்ததே 130 ரூபாய் எனக் கூறப்பட்டது. இப்படி கூறிய அரசாங்கம் இன்று விவசாயிகளை மறந்து, வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களின் சார்பாகத்தான் செயற்பட்டு வருகிறது. அரசாங்கமானது இதனைவிட கூர்மையாக மக்களின் குறைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.