முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு இன்று நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை இந்த மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த மனுவில், முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தனது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.